முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

தை அமாவாசை நாளான நேற்று ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு திண்டுக்கல் கோபாலசமுத்திரம் கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.;

Update: 2021-02-11 22:02 GMT
திண்டுக்கல்:
ஆண்டுதோறும் ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. 

அந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அதன்படி தை அமாவாசை நாளான நேற்று ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு திண்டுக்கல் கோபாலசமுத்திரம் கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். 

அப்போது அவர்கள் வாழை இலையில் தேங்காய், பழம், பச்சரிசி, காய்கறிகள், பூக்களை வைத்து படையலிட்டனர். பின்னர் புரோகிதர்கள் மந்திரங்கள் சொல்ல எள், தண்ணீர் விட்டு தர்ப்பணம் கொடுத்தனர். 

அதன்பிறகு பூஜை செய்த பச்சரிசியில் சிறிதளவு வீட்டிற்கு எடுத்து சென்று சமையலில் சேர்த்து விரதம் முடித்தனர். இன்னும் சிலர் தர்ப்பணம் முடித்து பசுமாட்டுக்கு அகத்திக்கீரை உண்ண கொடுத்தனர்.

இதேபோல் பழனி சண்முகநதி கரையில் அதிகாலை முதலே ஏராளமானோர் தர்ப்பணம் செய்ய குவிந்தனர். 

அங்கு அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு அரிசி, எள் ஆகியவற்றை படைத்து தர்ப்பணம் செய்தனர். பின்னர் ஆற்றில் புனித நீராடினர். இதனால் சண்முகநதி பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்