நாமக்கல்லில் ஒரு வாரமாக நடைபெற்று வந்த ரிக் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

ஆழ்துளை கிணறு அமைக்க அடிக்கு ரூ.12 கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, நாமக்கல்லில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த ரிக் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2021-02-11 21:06 GMT
நாமக்கல்,


டீசல், ஆயில் மற்றும் மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து நாமக்கல்லில் கடந்த 7 நாட்களாக ரிக் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையொட்டி நாமக்கல்லில் உள்ள நல்லிபாளையம் பைபாஸ் இணைப்பு சாலை பகுதியில் பந்தல் போட்டு, அங்கேயே 20 ரிக் லாரிகளை நிறுத்திவைத்து போராட்டம் நடத்தினர். டிரைவர், கிளீனர்களும் அங்கேயே தங்கி சமையல் செய்து சாப்பிட்டு வந்தனர்.
டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான கட்டணத்தை உயர்த்தி கொள்ள ரிக் லாரி உரிமையாளர்கள் முடிவு செய்தாலும், கருத்து ஒற்றுமை ஏற்படாததால் போராட்டம் ஒரு வாரமாக நீடித்து வந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு ரிக் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பாரி கணேசன், அய்யாவு உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ரிக் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வாபஸ் பெறப்பட்டது

இந்த பேச்சுவார்த்தையின்போது தற்போது 300 அடி வரை ஆழ்துளை கிணறு அமைக்க ஒரு அடிக்கு ரூ.75 கட்டணமாக பெறப்பட்டு வருகிறது. இதை அடிக்கு ரூ.12 உயர்த்தி ரூ.87 வசூலிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனைத்து ரிக் உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ரிக் உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இதன் காரணமாக நேற்று காலையில் மாவட்டம் முழுவதும் ரிக் லாரிகள் வழக்கமான பணிக்கு செல்ல தொடங்கின.

மேலும் செய்திகள்