சுற்றுச்சாலையில் கூடுதலாக வசூலித்த சுங்கக்கட்டணத்தை பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கப்பட்டுவிட்டது

சுற்றுச்சாலையில் கூடுதலாக வசூலித்த சுங்கக்கட்டணத்தை பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கப்பட்டுவிட்டது என்று மதுரை ஐகோர்ட்டில் மாநகராட்சி தெரிவித்தது;

Update: 2021-02-11 20:21 GMT
மதுரை
சுற்றுச்சாலையில் கூடுதலாக வசூலித்த சுங்கக்கட்டணத்தை பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கப்பட்டுவிட்டது என்று மதுரை ஐகோர்ட்டில் மாநகராட்சி தெரிவித்தது.
கூடுதல் வசூல்
மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மதுரை உத்தங்குடி முதல் கப்பலூர் வரை சுற்றுச்சாலை அமைக்கப்பட்டது. இதற்காக உலக வங்கி மூலம் கடன் பெறப்பட்டது. இந்த சுற்றுச்சாலைகளில் 5 இடங்களில் சுங்கச்சாவடி அமைத்து அந்த சாலையை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 15 ஆண்டுகளுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய மதுரை மாநகராட்சிக்கு அரசு அனுமதி வழங்கியது. ஆனால் அதையும் மீறி தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
இதை விசாரித்த தனி நீதிபதி, சுங்கக்கட்டண மையங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் மதுரை சுற்றுச்சாலைகளில் இருந்த 5 சுங்கச்சாவடிகளை உடனடியாக மாநகராட்சி அகற்றியது. இந்தநிலையில் அரசின் உரிய அனுமதி இல்லாமலும், சட்டவிரோதமாக மாநகராட்சி வசூல் செய்த சுங்கக்கட்டணம் ரூ.35 கோடியை சம்பந்தப்பட்ட அந்தந்த வாகன உரிமையாளர்களிடம் திரும்ப செலுத்த வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
பல்வேறு திட்டங்களுக்கு செலவு
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பாசத்தியநாராயணா, கண்ணம்மாள் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், சுங்கக்கட்டணங்களை சாலை மேம்பாட்டுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் சுற்றுச்சாலையில் சென்ற வாகனங்களிடம் கூடுதலாக வசூலித்த தொகையை அவர்களிடமே மீண்டும் திருப்பி செலுத்த உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார். 
மாநகராட்சி வக்கீல் ஆஜராகி, கூடுதலாக வசூலித்த தொகை, மாநகராட்சியின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசின் அனுமதியும் உள்ளது. எனவே இந்த தொகையை திரும்ப செலுத்த இயலாது என்றார்.
ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சுற்றுச்சாலையில் கூடுதலாக வசூலித்த தொகையை, மாநகராட்சி எந்த திட்டங்களுக்காக செலவு செய்தது. அதற்கான அரசின் அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல இதுதொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஆவணங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்