டாக்டர் வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை
மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வீட்டில் 23 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்;
மதுரை
மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வீட்டில் 23 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அரசு ஆஸ்பத்திரி டாக்டர்
மதுரை கே.கே.நகர் 2-வது மெயின் ரோடு, கோமதிபுரம் டெபுடி கலெக்டர் காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேஷ் (வயது 30). இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மாமனார் வீடு அவனியாபுரத்தில் உள்ளது. எனவே சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு மனைவி மற்றும் குழந்தைகள் சென்றுவிட்டனர். மேலும் பிரசன்னவெங்கடேசுக்கு அன்று இரவு பணி என்பதால் அவர் வீட்டை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார்.
வேலை முடிந்து மாமனார் வீட்டிற்கு சென்ற அவர் மறுநாள் மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் வெளியே சிதறி கிடந்தன.
வீட்டில் நகை, பணம் திருட்டு
மேலும் வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 23 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 7 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்து கைரேகை நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது.
சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பழனிக்குமார் தலைமையில் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்கள் நடமாட்டம் பதிவாகி உள்ளதா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.