கோவை மாநகராட்சி நில அளவையர் உள்பட 3 பேர் கைது

பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி நில அளவையர் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-11 19:09 GMT
நிலஅளவையர் நிர்மல்குமார்
கோவை,

கோவை ஒண்டிபுதூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 62). இவருடைய மனைவி சுமதி. நாகராஜ் 3 வீட்டுமனைகளை வாங்கினார். 

இதற்காக வீட்டுமனையின் பட்டா பெயர் மாற்றத்துக்காக கோவை சிங்காநல்லூரில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை அணுகினார். 


கடந்த 2 மாதங்களாக அலைந்து திரிந்தும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டும் தாமதம் செய்து வந்துள்ளனர்.


நிலஅளவையர் நிர்மல்குமார் (40) என்பவரிடம் இதற்கான கோப்பு இருந்தது. அவர், பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும், இதுதொடர்பாக அலுவலகத்தில் உள்ள நடராஜன் (62) என்பவரை போய் சந்திக்குமாறும் நாகராஜிடம் கூறியுள்ளார்.


ரூ.6 ஆயிரம் லஞ்சம்


நடராஜனை, நாகராஜ் சந்தித்தபோது, ரூ.6 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும், அதன்பின்னர் பட்டா பெயர் மாற்ற புத்தகத்தை தருவதாகவும் கூறியுள்ளார். 

தான்பணம் கொண்டுவரவில்லை என்றும் புத்தகத்தை தந்ததும் மறுநாள் பணத்தை தருவதாகவும் நாகராஜ் கூறியுள்ளார். 

இதுகுறித்து நிலஅளவையர் நிர்மல்குமாரிடமும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பட்டா புத்தகத்தை கொடுத்துவிட்டனர்.


இந்தநிலையில் ரூ.6 ஆயிரம் லஞ்சம்கேட்டது குறித்து நாகராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். 

லஞ்சஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பரிமளாதேவி, எழிலரசி, சசி லேகா ஆகியோர் ரூ.6 ஆயிரம் பணத்தில் ரசாயன பொடி தடவி கொடுத்தனர்.


நாகராஜும் நேற்று காலை இந்த பணத்துடன்  மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்துக்கு சென்று நிலஅளவையர் நிர்மல்குமாரை சந்தித்து ரூ.6 ஆயிரத்தை கொடுத்தார். அவர் தன்னிடம் கொடுக்க வேண்டாம், உதவியாளர் நடராஜிடம் கொடுக்குமாறு தெரிவித்தார். 

நடராஜும் பணத்தை வாங்காமல், பிரதீப்குமார் என்ற வாலிபரிடம் கொடுக்குமாறு சொன்னார். பிரதீப்குமாரிடம் பணத்தை கொடுத்தபோது அவர் வாங்கிக்கொண்டார்.


அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரதீப்குமாரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஆனைமலையை சேர்ந்தவர் என்றும் தான் நீண்டநாட்களாக நில அளவையர் நிர்மல்குமாரிடம் புரோக்கர்போல் செயல்பட்டு வந்ததாகவும் கூறினார்.

3 பேர் கைது


இதைத்தொடர்ந்து பிரதீப்குமார், நில அளவையர் நிர்மல்குமார், நடராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் நடராஜன் ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர் ஆவார். மேலும் அவர்கள் மீது அரசு பணிக்கு லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நிலஅளவையர் உள்பட 3 பேர் கைதான விவகாரம் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்