நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையையொட்டி நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு நடந்தது. திருப்புவனத்தில். நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்ய குவிந்தனர்.

Update: 2021-02-11 18:34 GMT
திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்களை படத்தில் காணலாம்.
திருப்புவனம்,

தை அமாவாசையையொட்டி நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு நடந்தது. திருப்புவனத்தில். நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்ய குவிந்தனர்.

தை அமாவாசை

 தை அமாவாசையையொட்டி நேற்று சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், காரைக்குடி, தேவகோட்டை, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஊருணி, தெப்பக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம்(திதி) கொடுத்து வணங்கினர். திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புஷ்பவனேசுவரர்- சவுந்தரநாயகி அம்மன் கோவில் உள்ளது.இங்கு உள்ள வைகை ஆற்றங்கரையில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இங்கு தர்ப்பணம் கொடுப்பது காசியை விட மேலானது என கூறுகின்றனர். இதனால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து செல்வார்கள்.
குறிப்பாக ஆண்டுதோறும் வரும் தை அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இங்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். அதன்பின்னர் சிவன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்வார்கள்.

தர்ப்பணம் கொடுத்து...

.இந்த நிலையில் நேற்று தை அமாவாசையையொட்டி அதிகாலை 6 மணிமுதல் சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருப்புவனத்துக்கு வந்திருந்தனர். அங்கு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக வைகை ஆற்றில் குவிந்தனர்.
இதற்காக வைகை ஆற்றில் நீண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை வழிபட்டனர்.

சிறப்பு வழிபாடு

அதன் பின்னர் அருகில் உள்ள புஷ்பவனேஸ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக வைகை ஆற்றுக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் சாலையில் நெரிசல் இல்லாமல் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வைகையாற்றில் சிறிதளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் கரையில் இருந்து இறங்கி தர்ப்பணம் நடைபெறும் இடத்திற்கு வைகை ஆற்றின் உள்ளே முழங்கால் ஆழத்திற்கு தண்ணீருக்குள் சென்று திதி தர்ப்பணம் செய்தனர். திதி தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் மோட்டார் சைக்கிள்கள் திருப்புவனம் -மேலூர் சாலையின் இருபுறமும் அதிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அகத்தி கீரை வழங்கினர்

 காரைக்குடியை அடுத்த கோவிலூரில் உள்ள கொற்றாளீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கூட்டமாக வந்து தெப்பக்குளத்தில் நீராடினார்கள். பின்னர் தெப்பக்குளத்தின் கரையில் தங்களது முன்னோர்களை வணங்கினர். அதன் பின்னர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அகத்தி கீரையை வாங்கி மாடுகளுக்கு தானம் வழங்கினர்.
தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் வந்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படை வீரர்களும் அங்கிருந்தனர். இதேபோல் தேவகோட்டையை அடுத்த கண்டதேவி பகுதியில் உள்ள கோவில் தெப்பக்குளத்தில் ஏராளமானோர் நீராடி விட்டு கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கினர்.

காளையார்கோவில்

காளையார்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசொர்ண காளீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தார்கள்.
இந்த ஆண்டு பெய்த மழையினால் தெப்பக்குளத்தில் ஓரளவு தண்ணீர் நிறைந்துள்ளது.எனவே தர்ப்பணம் செய்ய வந்தவர்கள் தெப்ப குளத்தில் புனித நீராடி சென்றார்கள். இதனைத் தொடர்ந்து காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்