கரூர் அமராவதி ஆற்றில் தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினர் ஆய்வு
கரூர் அமராவதி ஆற்றில் தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினர் ஆய்வு செய்தனர்.
கரூர்,
கரூர் அமராவதி ஆற்றுப்பகுதியில் சாயக்கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகள் கலப்பதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியானது. இதன் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டு, விசாரணை நடத்தியது. இதில் கரூர் மாவட்ட சட்ட மைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து குழு அமைக்கப்பட்டு ஆற்றுப்பகுதியில் கழிவுகள் கலப்பது குறித்து, பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து தண்ணீரின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அனைத்துத்துறையினர் அடங்கிய குழுவை அமைத்து அமராவதி ஆறு, கிளை வாய்க்கால்களில் கழிவுகள் கலப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினர் ஆய்வு
இதனையடுத்து நேற்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி கார்த்திக்கேயன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், அமராவதி ஆறு பொதுப்பணித்துறை அலுவலர் சரவணன் உள்ளிட்ட குழுவினர் கரூர் அமராவதி ஆற்றில் சின்னாண்டாங்கோவில், அமராவதி ஆற்றில் இரட்டை வாய்க்கால் கலக்கும் லைட்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கிளை வாய்க்கால்கள் ஆகியவற்றில் சாயக்கழிவு மற்றும் கழிவு நீர் கலக்கும் இடங்கள் மற்றும் திடக்கழிவு மேலாண் மை திட்டம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) இரட்டை வாய்க்கால் பகுதிகளில் தண்ணீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.