பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் பணம் வழங்கப்படவில்லை: மோசடி நிதி நிறுவனம் முன் போராட்டம் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

களியக்காவிளை அருகே மோசடி நிதி நிறுவனம் முன்பு மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் வாடிக்கையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.;

Update: 2021-02-11 17:14 GMT
களியக்காவிளை, 
களியக்காவிளை அருகே மோசடி நிதி நிறுவனம் முன்பு மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் வாடிக்கையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பல கோடி ரூபாய் மோசடி
களியக்காவிளை அருகே மத்தம்பாலையை சேர்ந்தவர் நிர்மலன். இவர் தான் நடத்தி வந்த நிர்மல் கிருஷ்ணா என்னும் நிதி நிறுவனத்தை 2017-ம் ஆண்டு மூடி விட்டு தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்தநிலையில் நிர்மலன் கோர்ட்டில் சரணடைந்தார்.
மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், வாடிக்கையாளர்களின் பணம் நிதி நிறுவனத்திடம் இருந்து வசூல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்திருந்தனர். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை.
தர்ணா
இதனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் தலைமையில் வாடிக்கையாளர்கள் மத்தம்பாலையில் நிதி நிறுவனத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். போராட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது நிதி நிறுவனத்துக்கு எதிராகவும், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்