ஆயிரக்கணக்கானோர் வேதாரண்யம் கடலில் புனித நீராடினர்

தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் வேதாரண்யம் கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Update: 2021-02-11 17:13 GMT
வேதாரண்யம்:
தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் வேதாரண்யம் கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தை அமாவாசை
நம்முடைய முன்னோர்கள் நினைவாக மாதம்தோறும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். இதனை கடைபிடிக்க முடியாதவர்கள், தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினத்தில் தரப்பணம் கொடுத்து வழிபட்டால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினத்தில் வழிபட்ட பலன் கிடைப்பதாக ஐதீகம். 
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதிகடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது கடற்கரையில் தை அமாவாசையையொட்டி  மக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
தர்ப்பணம்
இந்த நிலையில் நேற்று ைத அமாவாசையையொட்டி வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு பச்சரிசி, எள், காய்கறி, பழங்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு ஆகிய பொருட்களை வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் காலை முதலே கடற்கரை பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதை தொடர்ந்து வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் புனித நீராடி திருமணகோலத்தில் உள்ள சிவபெருமானையும் தரிசனம் செய்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் போலீசார் செய்திருந்தனர்.
நாகை
நாகை புதிய கடற்கரையில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு திரளான பொதுமக்கள தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் வங்கக்கடலில் புனித நீராடினர். இதனால் நேற்று நாகை புதிய கடற்கரையில் அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது
மேலும், தை அமாவாசையை முன்னிட்டு நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து கல்யாணசுந்தரர், கோகிலாம்பாள் சாமிகள் நாகரின் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரைக்கு வந்தடைந்தனர்.
தீர்த்தவாரி
பின்னர் அஸ்திரதேவருக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி மாவு, தேன், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கடலில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதை தொடர்ந்து  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்