தை அமாவாசை படையல் விழா

உளுந்தூர்பேட்டை அக்னி பெரியாயி அம்மன் கோவிலில் தை அமாவாசை படையல் விழாவையொட்டி கருவாட்டு குழம்புடன் முட்டை, சுருட்டு, மதுபானம் ஆகியவற்றை சாமிக்கு படைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்

Update: 2021-02-11 17:13 GMT
உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அக்னி பெரியாயி அம்மன் கோவிலில் தை அமாவாசை படையல் விழாவையொட்டி கருவாட்டு குழம்புடன் முட்டை, சுருட்டு, மதுபானம் ஆகியவற்றை சாமிக்கு படைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

அக்னி பெரியாயி அம்மன்

உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே அக்னி பெரியாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று அம்மனுக்கு விசேஷ படையல் நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டும் அம்மனுக்கு விசேஷ படையல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு முதலில் கோவிலில் உள்ள பாவாடைராயன் மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு தீபாராதனை காண்பித்து மற்றும் படையல் நடைபெற்றது. இதில் பாவாடை ராயனுக்கு குவாட்டர் மற்றும் சுருட்டு, கருவாட்டு குழம்பு வைத்து படையல் இடப்பட்டது.

1000 முட்டை, கருவாட்டு குழம்பு

இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அக்னி பெரியாயி அம்மனுக்கு கோழி அறுத்து பலி கொடுக்கப்பட்டது. பின்னர் ஆயிரம் முட்டை, 500 வாழைப்பழம், 500 தேங்காய் மற்றும் கருவாட்டு குழம்பு சாதம் என தடால் புடலாக படையல் இடப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அப்போது பக்திப் பெருக்கில் சில பெண்கள் சாமி ஆடினார்கள். தொடர்ந்து பெண்களுக்கு அம்மன் கழுத்தில் இருந்த தாலிக்கயிறு, வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. அம்மனுக்கு படைக்கப்பட்ட முட்டை உள்ளிட்ட படையல் சாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருவிழாவில் கலந்து கொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் ஆகும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்