நாளை முதல் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்
நாளை முதல் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்
அண்ணாமலை நகர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தையே தங்களிடமும் வசூலிக்கக்கோரி கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, முதலாமாண்டு மருத்துவ மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்ததோடு, விடுதிகளையும் பல்கலைக்கழக நிர்வாகம் மூடியது. இருப்பினும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததன் எதிரொலியாக மாணவர்களின் கல்விக்கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி ஆகியவற்றில் முதுகலை படித்து வரும் மாணவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமைி) முதல் வகுப்புகள் தொடங்கப் பட உள்ளது. இதேபோல் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.