ஆர்.எஸ்.பாரதி மீது அ.தி.மு.க.வினர் போலீசில் புகார்

ஆர்.எஸ்.பாரதி மீது அ.தி.மு.க.வினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

Update: 2021-02-11 16:35 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார் தலைமையிலான அ.தி.மு.க. நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கை சந்தித்து புகார் ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பெண் குலத்தை இழிவு செய்யும் விதமாக தகாத வார்த்தைகளால் அநாகரிகமான முறையிலும், சட்டம்-ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், வன் முறையை தூண்டும் வகையிலும், பங்கம் விளைவிக்கும் வகையில் சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி பேசி உள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 
அப்போது ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக் குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டியன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சாமிநாதன், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் விக்னேஸ்வரன், நகர் செயலாளர் ஆதில்அமீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்