புகழ்பெற்ற கோவில்களின் பிரசாதங்களை தபாலில் பக்தர்களுக்கு அனுப்ப நடவடிக்கை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேட்டி
தமிழகத்திலுள்ள புகழ்பெற்ற கோவில்களின் பிரசாதங்களை தபால் மூலம் பக்தர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கோவில்பட்டி:
தமிழகத்திலுள்ள புகழ்பெற்ற கோவில்களின் பிரசாதங்களை தபால் மூலம் பக்தர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் மலை மீது 133 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மண்டல இணை ஆணையர் அலுவலகம்
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழகத்தில் 11 மண்டல இணை ஆணையாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கூடுதலாக 9 மண்டல இணை ஆணையாளர் அலுவலகம் அமைக்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
அந்த வகையில் நெல்லை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டத்தினை பிரித்து, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தினை இணைத்து தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு மண்டல இணை ஆணையர் அலுவலகம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் 133 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. இதில் 12 பீடம் மற்றும் 123 அடி முருகன் சிலை இருக்கும். இதற்கான கால்கோள் விழா நடைபெற்றுள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்காக ரூ.28 கோடி மதிப்பீட்டில் யாத்ரீக நிவாஸ் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
ஏற்கனவே திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தில் உள்ள பக்தர்கள் தங்கும் அறைகள் சேதமடைந்துள்ளதால், அவற்றை பக்தர்கள் பயன்படுத்த கொடுக்க முடியாத நிலை இருப்பதால் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
தபாலில் கோவில் பிரசாதங்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து புகழ்பெற்ற கோவில்களின் பிரசாதங்கள் தபால் மூலம் பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு கிராமங்களில் உள்ள கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். யாரும் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களை தனியார் யாரும் கேட்கவில்லை.
கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. திருச்செந்தூரில் தற்காலிகமாக சுற்றுப்பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக சுற்றுப்பிரகாரம் அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அது தொடக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.