குடியாத்தம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கோவில் திருவிழாவையொட்டி பிரிவு பணம் பெறுவது தொடர்பாக ஒரு குடும்பத்தினர் கூறிய புகாரால் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் சூழ்ந்து முற்றுைகயிட்டனர்.

Update: 2021-02-11 12:38 GMT
குடியாத்தம்

கோவில் திருவிழாவையொட்டி பிரிவு பணம் பெறுவது தொடர்பாக ஒரு குடும்பத்தினர் கூறிய புகாரால் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் சூழ்ந்து முற்றுைகயிட்டனர்.

கோவில் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் கிராமத்தில் துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சில தினங்களில் திருவிழா நடக்க உள்ளது. 

நிகழ்ச்சிகளை நடத்த விழா குழுவினர் கிராம மக்களிடம் பிரிவு பணம் பெற்றுள்ளனர். ஆனால் ஒரு குடும்பத்தினர், எங்களிடம் விழா குழுவினர் பிரிவு பணம் வாங்காமல் ஒதுக்குவதாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் தெரிவித்தனர். அதற்கு போலீசார், திருவிழா நடப்பது குறித்தும், அதற்கு பிரிவு பணம் வாங்காதது குறித்தும் வருவாய்த்துறையினரிடம் தகவல் தெரிவிக்குமாறு அந்த ஒரு குடும்பத்தினரிடம் கூறினர்.

இதற்கிடைேய, இன்று காலை லிங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் மற்றும் விழா குழுவினரும், ஊர் முக்கியஸ்தர்களும் என 300-க்கும் மேற்பட்டோர் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்து சூழ்ந்து முற்றுகையிட்டனர். 

அப்போது அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நேரத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் மட்டும் தொடர்ந்து இதுபோல ஏதேனும் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினர்.

பேச்சுவார்த்தை

அவர்களிடம் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சியாமளா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், மணிகண்டன், தண்டபாணி, ரவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், திருவிழா நடத்த போலீசார் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும், எனக் கிராம மக்களிடம் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
-----

மேலும் செய்திகள்