சென்னையில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி - மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னையில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள பூங்காவில் 30 வகையான மரக்கன்றுகள் மூலம் மியாவாக்கி அடர் வனக்காடுகள் உருவாக்கும் பணியை நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி முழுவதும் ஆயிரம் இடங்களில் அடர் வனக்காடுகள் உருவாக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்லுயிர் பெருக இது வாய்ப்பாக அமையும். தற்போது 32-வது இடமாக தலைமை செயலகம் பூங்காவில் மியாவாக்கி அடர் வனக்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மரங்கள் வளர்ப்பை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை சென்னையில் சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதனால் சென்னையில் கொரோனா தடுப்பூசி மையங்கள் கூடுதலாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு மட்டும் தனியாக 2 அல்லது 3 மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் யாரும் பயப்படவேண்டாம்.
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். இந்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தனி நபர் விருப்பத்தை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. முக கவசம் அணிவதை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
சென்னையில் அம்மா மினி கிளினிக்குகளில் பணி செய்ய 200 டாக்டர்கள், 200 செவிலியர்கள், 200 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேண்டும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் மருத்துவ பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.