அரசு வேலை தராவிட்டால் ஜெயலலிதா நினைவிடத்தை தகர்ப்பேன் - டி.ஜி.பி. அலுவலகத்தில் பரபரப்பு மனு கொடுத்த வாலிபர்
அரசு வேலை தராவிட்டால், ஜெயலலிதா நினைவிடத்தை குண்டு வைத்து தகர்ப்பேன் என்று டி.ஜி.பி. அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் பரபரப்பு மனு கொடுத்தார்.
சென்னை,
அந்த வாலிபரின் பெயர் மணிகண்ட பிரசாத் (வயது 27). சென்னை கொருக்குபேட்டை பாரதிநகரைச் சேர்ந்தவர். பட்டதாரியான இவர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார். அதை படித்து பார்த்த டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த மனுவில், எனக்கு அரசு வேலை கொடுக்காவிட்டால், ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டுகள் வீசி தகர்ப்பேன் என்று கூறி இருந்தார். அவரிடம் டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசினார்.
உடனடியாக டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் அந்த வாலிபரை மெரினா போலீசில் ஒப்படைத்தனர். மெரினா போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதன்பின் அவர் திருவல்லிக்கேணியில் உள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டதாகவும், அவர் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.