புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை: பி.எஸ்.என்.எல். இணையதள சேவை குறைபாடு - தனியார் நிறுவனங்களை நாடி செல்லும் மாணவர்கள்

சென்னை புறநகர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல். இணையதள சேவை முறையாக கிடைக்காததால் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக மாணவர்கள் கூறி உள்ளனர்.

Update: 2021-02-11 01:33 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியில் கற்றுத்தரப்படுகிறது. தேர்வுகளும் ஆன்லைன் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பெற்றோர்கள் செல்போன் மற்றும் இணையதளத்திற்கு என்று தனியாக ஒரு தொகை செலவிட வேண்டி இருக்கிறது.

இதற்காக மாணவர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தேர்வு செய்து ரூ.2 ஆயிரம் வரை ரீசார்ஜ் செய்து வகுப்புகளையும், தேர்வுகளையும் சந்தித்து வருகின்றனர். ஆனால் சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த அளவில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் இணையதள சேவை முறையாக கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுகளை சந்திக்க இருக்கும் பொறியியல் மற்றும் எம்.பி.ஏ. படிக்கும் மாணவ, மாணவிகள் கூறியதாவது:-

கொரோனா நோய் தாக்கத்தால் மாணவர்கள் சொல்லண்ணா துயரத்திற்கு ஆளாகி போனார்கள். தற்போது நோய் தாக்கத்தில் இருந்து மாணவர் சமுதாயத்தை காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அரசு கல்வி நிறுவனங்களில் வகுப்புகளையும், தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்துகிறது. இதனை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம். அரசுக்கு நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.

ஆனால் சென்னையின் புறநகர் பகுதிகளான திருவான்மியூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் எங்களுக்கு இணையதள வசதியை முறையாக பெறமுடியாமல் அவல நிலையில் இருக்கிறோம்.


இதனால் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சிம்கார்டு பெற்று ரூ.2 ஆயிரம் வரை ரீசார்ஜ் செய்து வகுப்புகள், கருத்தரங்கம், மாதிரி தேர்வுகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நடத்தும் அனைத்து நடவடிக்கைகளிலும் கலந்து கொள்கிறோம். ஆனால் கடந்த ஒரு மாதமாக சென்னையில் புறநகர் பகுதிகளில் இணையதள சேவை முடங்கி உள்ளது. இதனால் வகுப்புகளில் பங்கேற்ற முடியாத நிலை ஏற்பட்டு மனஉளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். இதுகுறித்து புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வருகிற 15-ந்தேதி தொடங்கும் அண்ணாபல்கலைக்கழக தேர்வுகளை சந்திப்பதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. முறையாக தேர்வுகளை சந்திக்காவிட்டால் எங்கள் வாழ்க்கையே கேள்வி குறியாகி விடும். இதனால் எங்களுடன் படிக்கும் ஒரு சில வசதி படைத்த மாணவர்கள் கட்டணம் அதிகமாக இருந்தாலும் சில தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களை தேடி சென்று விட்டனர். எல்லா மாணவர்களாலும் தனியார் நிறுவனங்களை நாடி செல்ல முடியவில்லை.

இது இப்படி இருக்க, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் பேசும் போது, தடையில்லா ஆன்லைன் வழிக்கல்வி கிடைத்ததாக பெருமிதமாக கூறியது வேடிக்கையாக உள்ளது. மாணவர்கள் நலன் கருதி பி.எஸ்.என்.எல். நிறுவனம் உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு மாணவ, மாணவி கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்