திருவாரூர் அருகே சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 34.24 ஏக்கரில் அமைந்துள்ள மில் அரசுடைமை
திருவாரூர் அருகே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 34.24 ஏக்கரில் அமைந்துள்ள மில் அரசுடைமையாக்கப்பட்டது.
திருவாரூர்,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவருடைய தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
இதில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைதண்டனை உறுதியானது. சிறை தண்டனை முடித்து சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது சொத்துக்களை தமிழக அரசு அரசுடைமையாக்கி வருகிறது.
34.24 ஏக்கர் மில் அரசுடைமை
அதன்படி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தஞ்சை ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை கிராமத்தில் ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட் பங்குதாரர்களான சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் பலருக்கு சொந்தமான சொத்து வண்டாம்பாளை கிராமம், கீழகாவாதுகுடி கிராமம் ஆகியவற்றில் உள்ள 34 ஏக்கர் 24 சென்ட்(14 லட்சத்து 91 ஆயிரத்து 494 சதுர அடி) மற்றும் வண்டாம்பாளை தொழிலாளர் குடியிருப்பு 5 தரை தளம், தரை தளத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு கட்டிடம், முதல் தளத்தில் உள்ள விருந்தினர் கட்டிடம், டுவின் ஹவுஸ் மற்றும் மேலாண்மை இயக்குனர் பங்களா ஆகிய சொத்துகளை தமிழ்நாடு அரசால் நேற்று அரசுைடமையாக்கப்பட்டுள்ளது.
வாடகை அரசுக்கு சொந்தம்
இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது யாதெனில் மேற்கண்ட சொத்துகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் சொத்துக்கள் என தெரிவிக்கப்படுகிறது. எனவே மேற்படி சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய்(வாடகை, நிலுவை வாடகை உள்பட) அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மில் பயன்பாடற்ற நிலையில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.