ஈரோடு, சத்தியமங்கலம் பகுதிகளில் 2 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு; புன்னகையைத்தேடி திட்டத்தில் நடவடிக்கை

ஈரோடு, சத்தியமங்கலம் பகுதிகளில் 2 குழந்தை தொழிலாளர்கள் புன்னகைத்தேடி திட்டத்தில் மீட்கப்பட்டனர்.

Update: 2021-02-10 23:01 GMT
ஈரோடு
ஈரோடு, சத்தியமங்கலம் பகுதிகளில் 2 குழந்தை தொழிலாளர்கள் புன்னகைத்தேடி திட்டத்தில் மீட்கப்பட்டனர்.
புன்னகையைத்தேடி
ஈரோடு மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளை மீட்கும் புன்னகையைத்தேடி என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து சைல்டு லைக் அமைப்புடன் சேர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்.
மாவட்ட சமூகநலத்துறையினர், போலீசார் ஆகியோர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில், சென்னை தொழிலாளர் ஆணையாளர் எம்.வள்ளலார் உத்தரவின் பேரில், மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆலோசனையில் புன்னகைத்தேடி திட்ட குழுவினர் ஈரோடு மாவட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
சிறுவன்-சிறுமி மீட்பு
ஈரோட்டில் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் தலைமையில் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், தொழிலக பாதுகாப்பு-சுகாதாரம் துணை மற்றும் உதவி இயக்குனர், சைல்டு லைன் உறுப்பினர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு குழு உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் ஈரோடு நேதாஜி ரோடு, பிரப் ரோடு, கனி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 60 கடைகள், உணவு நிறுவனங்களில் சிறப்பு குழுவினர் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு கடையில் 14 வயதுக்கு உள்பட்ட சிறுவன் ஒருவன் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த சிறுவன் மீட்கப்பட்டான். இதுபோல் சத்தியமங்கலம் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் குழுவினர் சோதனை செய்தனர். அப்போது செண்பகப்பதூர் பகுதியில் ஒரு கடையில் 14 வயதுக்கு உள்பட்ட சிறுமி ஒருவர் வேலையில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த சிறுமி மீட்கப்பட்டார்.
தண்டனை
குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட சிறுவன் மற்றும் சிறுமி ஆகிய 2 பேரும் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், அவர்களை பணியில் அமர்த்திய கடை உரிமையாளர்கள் மீது குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதுபற்றி ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், 15 வயது முதல் 18 வயதுவரையான உயர் இளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். இந்த வயதினர் பணியில் ஈடுபடுத்தப்படுவது கண்டறியப்பட்டால் அவர்களை பணியில் ஈடுபடுத்துபவர்கள் மீது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, அல்லது அபராதம், ஜெயில் ஆகிய 2 தண்டனைகளையும் சேர்த்தும் வழங்கப்படும். ஈரோடு மாவட்டம் முழுவதும் வருகிற 15-ந் தேதி வரை குழந்தை தொழிலாளர்களை கண்டறியும் சோதனை நடக்க இருக்கிறது. மேலும், சிறுவர்-சிறுமிகளை குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்துவது குறித்த தகவல்களை 1098 என்ற இலவச தொலைபேசியில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்