கோவை அருகே பணமழை பொழிந்த ஏ.டி.எம். எந்திரத்தால் பரபரப்பு - ஊர்க்காவல் படை வீரர் கொடுத்த தகவலால் பணம் தப்பியது
கோவை அருகே பணமழை பொழிந்த ஏ.டி.எம். எந்திரத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்க்காவல் படை வீரர் கொடுத்த தகவலால் பணம் தப்பியது.
துடியலூர்
கோவை கவுண்டம்பாளையம் அருகே இடையர்பாளையம் கே.என்.ஜி. புதூர் பிரிவு பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் செந்தில்குமார் என்பவர் சென்றார்.
அவர் எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி ரூ.3 ஆயிரம் எடுக்க பொத்தானை அழுத்தினார். அவருக்கு ரூ.3 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.7,200 பணம் வந்தது. இதனால் அவர் குழப்பம் அடைந்தார்.
இதையடுத்து அவர், ரூ.2 ஆயிரம் எடுப்பதற்காக பொத்தானை அழுத்தார். இந்த முறை அவருக்கு ரூ.4200 பணம் வந்தது. இதனால் அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கூடுதல் பணம் வந்ததாக கருதினார்.
உடனே அவர், வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ஏ.டி.எம். எந்திரத்தில் பதிவு செய்ததை விட கூடுதல் பணம் கொட்டியது குறித்த தகவல் பரவியது. இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியது. ஆனால் யாரையும் ஏ.டி.எம். மையத்திற்குள் விடாமல் செந்தில்குமார் தடுத்து நிறுத்தினார்.
இதனால் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் மற்றவர்களுக்கு கூடுதல் பணம் செல்வது தடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள் விரைந்து விசாரித்தனர். இதில், ரூ.200 கட்டுகள் வைக்க வேண்டிய இடத்தில் தவறுதலாக ரூ.500 கட்டுகள் பணம் வைக்கப்பட்டது தெரியவந்தது. உடனே அந்த ரூபாய் நோட்டு கட்டுகள் மாற்றி வைக்கப்பட்டது.
செந்தில்குமாருக்கு முன்னதாக அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் யாரும் பணம் எடுத்தார்களா என்று வங்கி அதிகாரிகள் விசாரிக்க தொடங்கி உள்ளனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரத்தில் பதிவு செய்ததை விட கூடுதல் பணம் வந்த தகவலை கொடுத்த செந்தில்குமாரை வங்கி அதிகாரிகளும், ஊர்காவல்படை ஏரியா கமாண்டர் பாலாஜி ராஜ், துணை ஏரியா கமாண்டர் வித்யா ஸ்ரீ தர்மராஜ் ஆகியோர் பாராட்டினர்.