புரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

புரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-10 22:23 GMT
சூலூர்,

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த முத்துக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் சின்னக்கண்ணன். இவருடைய மகன் ராஜா என்ற ஆரோக்கியராஜ் (வயது37). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

சம்பவத்தன்று ஆரோக்கியராஜ், அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவ ரிடம் மதுபாட்டில் வாங்கி குடித்து உள்ளார். ஆனால் அதற்கு பணம் கொடுக்க வில்லை என்று தெரிகிறது.

இதனால் அவர், ஆரோக்கியராஜின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதன் காரணமாக அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

முன்பகை

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு ஆரோக்கியராஜ் அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று புரோட்டா பார்சல் கட்டி, கூடுதலாக குருமா தர வேண்டும் என கேட்டுள்ளார். மேலும் சீக்கிரம் புரோட்டா கட்டி தருமாறு கூறியுள்ளார்.

 அதற்கு புரோட்டா மாஸ்டர் கருப்புசாமி, கூடுதல் குருமா தர முடியாது என்று கூறியுள்ளார். அப்போது அவருக்கு ஆதரவாக அந்த கடையில் இருந்த முத்து பேசியுள்ளார். முத்துவுக்கும், ஆரோக்கிய ராஜூக்கும் இடையே முன்பகை இருந்ததால் அவர்கள் இடை யே தகராறு ஏற்பட்டது.

மயங்கி விழுந்தார்

அப்போது ஓட்டல் உரிமையாளர் கரிகாலன் என்பவரும் முத்துவுடன் சேர்ந்து கொண்டு ஆரோக்கியராஜை கண்டித்துள்ளார். இதனால் அவர் கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஆரோக்கியராஜை பிடித்து கீழே தள்ளி விட்டு தாக்கினர். 

இதில் அவர் மயக்கம் அடைந்து பேச்சுமூச்சின்றி சுமார் ஒரு மணி நேரம் கிடந்தார். அவரை தாக்கியவர்கள், ஆரோக்கியராஜ் குடிபோதையில் கீழே விழுந்து கிடப்பதாக கருதி வழக்கம் போல் தங்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். 

சரமாரி தாக்குதல்

இதற்கிடையே, அங்கு வந்த உறவினர், ஆரோக்கியராஜ் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரோக்கியராஜை மீட்டு சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆரோக்கியராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆரோக்கியராஜின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து, அந்த ஓட்டலில் இருந்த பொருட்களை சூறையாடினர். மேலும் அந்த ஓட்டல் உரிமையாளர் கரிகாலன், புரோட்டா மாஸ்டர் கருப்புசாமி ஆகியோரை சரமாரியாக தாக்கினர். 

3 பேர் கைது

இது குறித்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் விரைந்து சென்று, காயமடைந்த கருப்புசாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆரோக்கியராஜின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, புரோட்டா மாஸ்டர் கருப்புசாமி (41), ஓட்டல் உரிமையாளர் கரிகாலன் (41), முத்து ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

உறவினர்கள் போராட்டம்

கொலை செய்யப்பட்ட ஆரோக்கியராஜ் உடல் கோவை அரசு ஆஸ்பத் திரியில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினர். 
அவர்களிடம் சூலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அவர்கள்,  இறந்தவரது மனைவிக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளி களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்