சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானது. இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
தாளவாடி
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானது. இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை ஈரோடு மாவட்டம் வழியாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. இதனால் இந்த வழியாக எப்போது கார், லாரி, பஸ், இருசக்கர வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும்.
திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளை லாரியை தவிர மற்ற வாகனங்கள் கடந்து விடுகின்றன. அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் வளைவுகளை கடக்க முடியாமல் நின்றுவிடுவதும், அதனால் நாள்தோறும் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தீர்க்க முடியாத பிரச்சினையாக உள்ளது.
லாரி பழுதானது
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகாலுக்கு சுண்ணாம்பு பாரம் ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு லாரி வந்துகொண்டு இருந்தது. அதிகாலை 4 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவை இந்த லாரி கடந்தது.
அப்போது லாரி பழுதாகி நின்றது. இதனால் மலைப்பாதையின் இருபுறமும் மற்ற கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவந்தன.
பயணிகள் புலம்பல்
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். பின்னர் பண்ணாரி இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டது. அதன்பிறகு காலை 9 மணியளவில் லாரி புறப்பட்டு சென்றது. இதனால் சுமார் 5 மணிநேரம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு வேடிக்கை பார்ப்பார்கள் என்று பயணிகள் புலம்பினார்கள்.