இன்று தை அமாவாசை: பவானி கூடுதுறையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

இன்று (வியாழக்கிழமை) தை அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் திதி கொடுக்க பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Update: 2021-02-10 22:04 GMT
பவானி
இன்று (வியாழக்கிழமை) தை அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் திதி கொடுக்க பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
தை அமாவாசை
ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் புனித நதிக்கரைகளில் முன்னோர்களுக்கு திதிகொடுத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும், முன்னோர்களின் வாழ்த்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
இன்று (வியாழக்கிழமை) தை அமாவாசை என்பதால் ஈரோடு மாவட்டத்தில் முக்கிய புண்ணிய தலமான பவானி கூடுதுறையில் ஏராளமான பொதுமக்கள் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள்.
காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் பவானி கூடுதுறையில் திதி கொடுப்பது சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது. அதனால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பவானி கூடுதுறைக்கு திதி கொடுக்க வருவார்கள். 
பாதுகாப்பு பணி
இந்தநிலையில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வினோதினி மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். இதேபோல ஆற்றில் புனித நீராடுபவர்களின் பாதுகாப்புக்காக ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு துறையினர், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
இது தவிர 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.  பக்தர்கள் திதி கொடுக்க தனித்தனி கூடாரங்கள், பந்தல்கள், புனித நீராடுபவர்கள் ஆற்றில் இறங்க படிக்கட்டில் தடுப்பு கட்டைகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் எந்த வரிசையில் வரவேண்டும் என்பதற்காக வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்