சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் போட்டியிட தயாராகும் தே.மு.தி.க.
கூட்டணி பேச்சுவார்த்தை தாமதம் ஆகி வருவதால் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிட தயாராகி வருகிறது.
சேலம்:
கூட்டணி பேச்சுவார்த்தை தாமதம் ஆகி வருவதால் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிட தயாராகி வருகிறது.
தே.மு.தி.க.
தமிழகத்தில் 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. அப்போது, விருத்தாசலத்தில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியை தழுவினார்கள்.
சேலம் மாவட்டத்திலும் 11 தொகுதிகளிலும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். அதன்பிறகு 2011-ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் சேலம் வடக்கு தொகுதியில் அழகாபுரம் மோகன்ராஜ், மேட்டூர் தொகுதியில் எஸ்.ஆர்.பார்த்திபன், கெங்கவல்லி (தனி) தொகுதியில் சுபாரவி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் மற்ற மாவட்டங்களை விட சேலம் மாவட்டம் தே.மு.தி.க.வின் கோட்டையாக திகழ்கிறது என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.
தேர்தல் பொறுப்பாளர்கள்
இந்தநிலையில், வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற குழப்பமான நிலையில் தே.மு.தி.க. தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணியில் தே.மு.தி.க. இறங்கிவிட்டது.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் சேலம் வடக்கு-கோபிநாத், சேலம் தெற்கு-தனசேகரன், சேலம் மேற்கு-தங்கவேல், கெங்கவல்லி (தனி) -சுபாரவி, ஆத்தூர் (தனி) -கணேசன் உள்பட 11 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அந்தந்த தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.
தனித்து போட்டி?
சமீபத்தில் சேலம் மாநகரில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க. நிர்வாகிகள், கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்ச வேண்டாம். தே.மு.தி.க. தனித்து போட்டியிடலாம். பா.ம.க. இடம்பெறாத கூட்டணியில் தே.மு.தி.க. இருக்க வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். விஜயகாந்த் மீது பாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் உண்மையாக இருப்பதாகவும், இதனால் தே.மு.தி.க.வுக்கு இறங்கு முகம் கிடையாது. ஏறுமுகம் தான் என்று கட்சி நிர்வாகிகள் பேசினர்.
அதோடு, சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தாலும், தனித்து போட்டியிட்டாலும் தே.மு.தி.க.வினர் சோர்வடையாமல் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் நம்பிக்கை அளித்து பேசினர்.
இதனிடையே, ஒருவேளை கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட நேர்ந்தால் 11 தொகுதிகளிலும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.