ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 76 பேர் கைது
ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 76 பேரை போலீசாா் கைது செய்தனா்.
ஈரோடு
சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணியின்போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி நேற்று 9-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் திரண்ட அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட இணைச்செயலாளர் திருமுருகன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து அவர்கள் தாலுகா அலுவலக வளாகம் முன்பு உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். 32 பெண்கள் உள்பட மொத்தம் 76 பேர் கைது செய்யப்பட்டு, ஈரோடு மாநகராட்சி மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாலையில் போலீசார் அவர்களை விடுதலை செய்தாலும் வீடுகளுக்கு செல்லாமல் மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.