சகாய அன்னை மின்தேர் பவனி
திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் சகாய அன்னை திருவிழா நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் இடைவிடா சகாய அன்னை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
திருவிழாவின் நிறைவு நாளான நேற்று காலை குணமளிக்கும் வழிபாடும், அதைத்தொடர்ந்து மாலையில் சிறப்பு திருப்பலி, சகாய அன்னை மின்தேர்பவனி நடந்தது.
இதனை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி முன்னிலை வகித்தார்.
இதில் திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், கூட்டுறவு ஒன்றிய குழு தலைவர் ராஜ்மோகன், மெர்சி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மின்தேர் பவனி திண்டுக்கல்லின் 4 ரத வீதிகள் வழியாக வந்து பேராலயத்தை அடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை சகாயராஜ் மற்றும் உதவி பங்கு தந்தைகள் செய்திருந்தனர்.