சீர்மரபினர் நலச்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
ஒரே சாதி சான்றிதழ் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அமைச்சர் வளர்மதியிடம் மனு கொடுத்து சென்றனர்.;
திருச்சி,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவரும், சீர் மரபினர் நல சங்கத்தின் மாநில தலைவருமான அய்யாக்கண்ணு, அகில இந்திய பார்வர்டு பிளாக் பசும்பொன் பிரிவு கட்சியின் நிர்வாகி காசி மாயன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நேற்று திருச்சி உறையூரில் உள்ள தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வீட்டிற்கு வந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
அவர்கள் வந்த போது அமைச்சர் வளர்மதி வீட்டில் இல்லை. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அமைச்சர் வளர்மதி அங்கு விரைந்து வந்து சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினார். அப்போது அவர்கள் அமைச்சரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
ஒரே சாதி சான்றிதழ்
அந்த மனுவில் ‘தமிழகத்தில் சீர் மரபினர் பிரிவில் 68 சாதிகளை சேர்ந்த சுமார் 2 கோடி பேர் உள்ளனர். சுதந்திர போராட்டத்தின்போது வெள்ளையர்களை எதிர்த்து ஆயுத போராட்டம் நடத்திய இவர்களுக்கு மத்திய அரசு சீர்மரபினர் பழங்குடி டி.என்.டி. என்ற சான்றிதழ் வழங்கியது. தமிழக அரசு 1979-ல் அதனை சீர்மரபினர் சாதிகள் டி.என்.சி. என பெயர் மாற்றம் செய்தது. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு 2019-ல் சீர்மரபினர் என மாற்றப்பட்டது. அதிலும் மத்திய அரசு சலுகைகள் பெற மட்டுமே டி.என்.டி. சான்றிதழ் செல்லும், மாநில அரசில் சீர்மரபினர் சாதிகள் டி.என்.சி. என்றே தொடர்வார்கள் என தமிழக அரசு அறிவித்தது. ஒரே பிரிவுக்கு இரு சாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் நாங்கள் பல சலுகைகளை பெற முடியவில்லை. எனவே சீர்மரபினர் பிரிவிற்கு டி.என்.டி.என்ற ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.
அமைச்சர் கருத்து
மனுவை கொடுத்து விட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக அமைச்சர் வளர்மதியிடம் கேட்டபோது ‘ஒரே சான்றிதழ் தொடர்பாக கடந்த ஜனவரி 4-ந்தேதி மனு கொடுத்து இருக்கிறார்கள். அதை முதல்-அமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றேன். இதுதொடர்பாக அரசு தலைமை வக்கீலிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. இப்போது அவர்கள் கொடுத்த மனுவும் அரசு செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இங்கு போராட்டம் எதுவும் நடக்கவில்லை. மனு கொடுக்க தான் வந்தனர்’ என்றார்.