மத்திய பட்ஜெட்டை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்ட நிதியை கடந்த ஆண்டைவிட மூன்றில் இரு பங்காக குறைத்ததை கண்டித்தும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுப்படுத்த சட்ட திருத்தம் செய்யவேண்டும், விவசாயத்திற்கான உரம் உள்ளிட்ட இடு பொருட்களின் மானிய குறைப்பை கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார். தங்கராஜ், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.