நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது
பத்ர தீப திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது.
நெல்லை:
பத்ர தீப திருவிழாவையொட்டி, நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது.
பத்ர தீப திருவிழா
நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையன்று பத்ர தீப திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பத்திர தீப திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
அன்று காலையில் கணபதி ஹோமம், சுவாமி வேணு வனநாதர் மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் மற்றும் அபிஷேக தீபாராதனைகளும், காந்திமதி அம்பாளுக்கு அபிஷேக தீபாராதனைகளும், அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனைகளும் நடைபெற்றது.
தங்க விளக்கில் தீபம்
நேற்று மாலையில் சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க விளக்கில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் தங்க விளக்கிலும், அதன் அருகில் உள்ள 2 வெள்ளி விளக்குகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து விளக்குகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்தல், 11 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு வசந்த மண்டபத்தில் மகேசுவர பூஜை நடைபெறுகிறது.மாலை 6.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்பாள் கோவிலில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள் ஆகிய இடங்களில் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் உலா வருகின்றனர். அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.