தபால் ஊழியர்கள் சாலை மறியல்

தபால் ஊழியர்கள் போலீஸ் ஜீப் டிரைவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-10 20:26 GMT
ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் தலைமை தபால் அலுவலகம் உள்ளது. நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனத்தில் வந்த தபால் மூட்டைகளை அலுவலக ஊழியர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவர் பழனி, போக்குவரத்திற்கு இடையூறாக தபால் வாகனத்தை ஏன் நிறுத்தி உள்ளீர்கள் என்று கேட்டு தபால் ஊழியர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தபால் ஊழியர்கள் தபால் வாகனத்தை சாலையின் குறுக்காக நிறுத்தி தபால் மூட்டைகளை சாலையில் வைத்து போலீஸ் ஜீப் டிரைவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், காதர்கான் (போக்குவரத்து) ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதனை ஏற்று தபால் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்