நெல்லை கலெக்டர் அலுவலகத்தை இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகையிட முயற்சி

நெல்லையில் கலெக்டர் அலுவலகத்தை இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகையிட முயன்றனர்.

Update: 2021-02-10 20:19 GMT
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

முற்றுகை போராட்டம்

முகமது நபி பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. பிரமுகர் கல்யாண ராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பாளை.ரபீக் தலைமை தாங்கினார். இந்திய தேசிய லீக் மாவட்ட செயலாளர் ஷேக் ஹயாத், அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலப்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளர் அப்துல் கையூம், வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த அய்யாவழி பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட அறிவியல் மையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை கொக்கிரகுளம் பஸ்நிறுத்தம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

300 பேர் கைது

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் சென்று முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 100 பெண்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மேலப்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். முற்றுகை போராட்டத்தையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்