சமையல் தொழிலாளி கொலை வழக்கு விபசார விவகாரத்தில் குத்திக்கொன்ற 2 பேர் கைது
கிருஷ்ணகிரியில், சமையல் மாஸ்டரை விபசார தொழில் விவகாரத்தில் குத்திக்கொன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
மதுரை மாவட்டம் செக்கானூரணி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமணி (வயது 60). சமையல் மாஸ்டர். மதுரை மேலூர் சிட்டம்பட்டியை சேர்ந்தவர் தேவபாண்டியன் (30). கார் டிரைவர். இவர்கள் இருவரும் திருப்பூரில் பணியாற்றிய போது நண்பர்கள் ஆகினர். இந்தநிலையில் 2 பேரும் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் முதலாவது கிராசில் ஒரு வாடகை வீட்டில் தங்கினர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென வீட்டின் உள்ளே புகுந்து ஜெயமணி மற்றும் தேவபாண்டியன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் மார்பில் கத்தியால் குத்துப்பட்ட ஜெயமணி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த தேவபாண்டியன் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
விபசார தொழில்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் படுகாயமடைந்த தேவபாண்டியனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த ஜெயமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தேவபாண்டியனிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அதில் தேவபாண்டியன், ஜெயமணி ஆகியோர் விபசார தொழில் செய்ததும், மர்மநபர்கள் இருவரும் நேற்று முன்தினம் அழகிகளிடம் உல்லாசமாக இருக்க வந்து சென்றுள்ளனர். பின்னர் 2-வது முறையாக மீண்டும் வந்தபோது அவர்களை ஜெயமணி, தேவபாண்டியன் ஆகியோர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
2 பேர் கைது
இந்த தகவலின் அடிப்படையில் துப்பு துலக்கிய போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை செய்தனர். அதில் மர்மநபர்கள் வந்த மோட்டார்சைக்கிளை வைத்து, அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி அடுத்த பில்லனகுப்பம் பகுதியை சேர்ந்த அகர்நிவாஸ் (வயது 23), குந்தாரப்பள்ளி கூட்ரோடு பகுதியை சேர்ந்த அகில் (எ) அகிலன் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 2 பேர் மீதும் ஏற்கனவே கிருஷ்ணகிரி போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.