கடலூர் மாவட்டத்தில் ரவுடி உள்பட 3 பேர் குண்டா் சட்டத்தில் கைது
கடலூர் மாவட்டத்தில் ரவுடி உள்பட 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கடலூா்:
நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் கடந்த மாதம் 17-ந்தேதி காராமணிக்குப்பம் மெயின்ரோட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் செல்வம் என்கிற விஜய்செல்வம் (வயது 39) என்பவர் குடிபோதையில் கையில் அரிவாளுடன் ரோட்டில் வருவோர், போவோரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.
இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம், அவரை கைது செய்ய முற்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அவரை அரிவாளால் வெட்ட முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைதான அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கொலை வழக்குகள்
இவர் மீது கோவை மேட்டுப்பாளையம், சென்னை மீனம்பாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகளும், காஞ்சீபுரம் மகாபலிபுரத்தில் 2 வழிப்பறி வழக்குகள், சென்னை குன்றத்தூரில் வழிப்பறி வழக்கு, வேலூரில் 2 கொலை மிரட்டல் வழக்குகள், நெல்லிக்குப்பத்தில் 5 வழக்குகளும் உள்ளன.
ரவுடியான இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவின்பேரில், செல்வத்தை நெல்லிக்குப்பம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான ஆணையை சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.
இதேபோல் மேலும் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் விவரம் வருமாறு:-
லாட்டரி சீட்டு விற்பனை
விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் கடந்த மாதம் 8-ந்தேதி விருத்தாசலம்- காட்டுகூடலூர் ரோடு ஏ.பி.நகரில் சிறுவரப்பூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் தமிழ் என்கிற தமிழழகன் (25) என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார்.
அவரை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். இவர் மீது 4 வழக்குகள் உள்ளன.
புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் கடந்த மாதம் 24-ந்தேதி அழகுபெருமாள்குப்பம் மாரியம்மன்கோவில் தெரு பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு அய்யனார் மகன் பாண்டு (39) என்பவர் 120 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்தார். அவரை பிடிக்க முயன்ற போது, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இவர் மீது புதுப்பேட்டை, பண்ருட்டி, திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 14 சாராய வழக்குகள் உள்ளன. இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த, அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவின்பேரில் தமிழழகன், பாண்டு ஆகிய 2 பேரையும் விருத்தாசலம், புதுப்பேட்டை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான ஆணையை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.