நாமக்கல்லில், பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் பிளஸ்-1 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
நாமக்கல்லில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் பிளஸ்-1 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் பிளஸ்-1 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-1 மாணவி
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் வசித்து வருபவர் துரைராஜ். இவர் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகே உள்ள கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் காவியா (வயது 17). இவர் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கொரோனா விடுமுறைக்கு பிறகு கடந்த 8-ந் தேதி முதல் பள்ளிக்கு சென்று வந்த மாணவி, தனக்கு அந்த பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை, வேறு பள்ளியில் சேருங்கள் என பெற்றோரிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை.
தற்கொலை
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். இருப்பினும் மாணவி காவியா கிடைக்கவில்லை. இதற்கிடையே நாமக்கல் ரெயில் நிலையம் அருகே உள்ள விவசாய கிணறு ஒன்றில் காவியா கிடந்தது தெரியவந்தது.. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் காவியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து துரைராஜ் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் மாணவி காவியா கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.