பொதுமக்கள், சமையல் செய்யும் போராட்டம்

பாதாள சாக்கடை திட்ட பணியால் பழுதான சாலைகளை சீரமைக்க கோரி காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சமையல் செய்யும் போராட்டம் நடத்தினார்கள்.;

Update: 2021-02-10 18:50 GMT
காரைக்குடி,

பாதாள சாக்கடை திட்ட பணியால் பழுதான சாலைகளை சீரமைக்க கோரி காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சமையல் செய்யும் போராட்டம் நடத்தினார்கள்.

வாகன ஓட்டிகள் அவதி

காரைக்குடி செஞ்சை பகுதியில் இருந்து தேவகோட்டை ரஸ்தா பகுதி, நாச்சுழியேந்தல், வைத்திலிங்கபுரம், கணேசபுரம், சத்தியாநகர் உள்ளிட்ட பகுதியில் பாதாள சாக்கடை பணி முடிந்தும் சாலை போடவில்லை. அங்கு சாலை குண்டும்-குழியுமாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள்.
இந்த நிலையில் சேதமான சாலைகளை சீரமைக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.
பின்னர் நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.. இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்துவதற்காக  நுழைய முயன்றபோது காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

சமையல் செய்யும் போராட்டம்

ஆனால் அதையும் மீறி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த காலதாமதம் ஆனதால் மதியம் 12.30 மணிக்கு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு கியாஸ் சிலிண்டர், அடுப்பு, காய்கறிகள், தண்ணீர் ஆகியவற்றை கொண்டு வந்து சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பாதாள சாக்கடை திட்ட பணியால் சேதமான சாலைகளை ஒரு மாத காலத்திற்குள் சீரமைப்பதாக எழுத்து பூர்வமாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்