காதல் தொல்லையால் கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

நாமகிரிப்பேட்டை அருகே காதல் தொல்லையால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-10 18:35 GMT
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே காதல் தொல்லையால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காதல் தொல்லை
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணாயிரம். இவரது மகள் அனிதா (வயது 19). இவர் நாமக்கல் அரசு கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அனிதாவின் செல்போன் எண்ணை பட்டணம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகளான சக்திவேல் மகன் வல்லரசு (21), மகாலிங்கம் மகன் அய்யமுத்து (22), செல்வராஜ் மகன் கோகுல்நாத் (21) ஆகியோர் தெரிந்து கொண்டு, போனில் அவருக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் வல்லரசு அனிதாவுக்கு அடிக்கடி காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் அனிதா மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
மாணவி தற்கொலை
இதனால் கடந்த 3-ந் தேதி மாணவி அனிதா வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து நடந்த அவரது இறுதிச்சடங்கில் வல்லரசு, அய்யமுத்து, கோகுல்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கிருந்த அனிதாவின் உறவினர்கள் அவர்கள் 3 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது கோகுல்நாத் அங்கிருந்து தப்பியோடி விட்டார். வல்லரசு, அய்யமுத்துவை பிடித்த உறவினர்கள், அவர்களை தாக்கி நாமகிரிப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். மேலும், மாணவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் புகார் அளித்தனர். 
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அனிதாவின் உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த வல்லரசு, அய்யமுத்துவை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதனிடையே சிகிச்சை பெற்று வந்த அவர்கள் 2 பேரும், அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர்.
சிறையில் அடைப்பு
இந்தநிலையில் வல்லரசு, அய்யமுத்து, கோகுல்நாத் ஆகியோர் சீராப்பள்ளியில் பதுங்கி இருப்பதாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து 3 பேரையும் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் நேற்று ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி வல்லரசு, அய்யமுத்து, கோகுல்நாத் ஆகிய 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்