பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

Update: 2021-02-10 18:24 GMT
பல்லடம்:-
பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கண்காணிப்பாளர்
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் சிம்மபுரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கோபி என்கிற காளிமுத்து (வயது40). இவரது மனைவி முத்துச்செல்வி (31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். காளிமுத்து திருப்பூரில் உள்ள ஒரு தனியார் சாய ஆலையில், கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சிம்மபுரி கார்டனில் சொந்த வீடு கட்டி கடந்த 7 வருடங்களாக வசித்து வருகிறார். 
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி அன்று குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்கள்  வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. 
நகை-பணம் திருட்டு
இதனால் அதிர்ச்சி அடைந்த காளிமுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.  அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு குறித்து காளிமுத்து கூறுகையில், வீட்டில் இருந்த சுமார் 15 பவுன் நகை, ரொக்கம் ரூ.30ஆயிரம் திருட்டு போனதாக தெரிவித்தார். 
பொதுமக்கள் அச்சம்
இதுபோல் ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் கடந்த மாதம் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருடப்படடது. தொடர்ந்து பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்