மீனவர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும்
நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் மீனவர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
நாகப்பட்டினம்;
நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் மீனவர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
உயர்நிலைப்பள்ளி
நாகையை அடுத்த சாமந்தான்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வரவேற்றார். தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இடஒதுக்கீடு
நாகை அருகே சாமந்தான்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப்பள்ளியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 40 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் நடப்பாண்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் மொத்த நிதிநிலை அறிக்கையில் நான்கில் ஒரு பங்கு நிதி கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. நமது நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 49 சதவீத மாணவர்கள் உயர்கல்வி பெறுகிறார்கள். நாகை மாவட்டத்தில் இயங்கும் மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் மீனவ சமுதாய மக்களின் வாரிசுகளுக்கு கல்விக்காக 5 சதவீத இட உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியதலைவர் தங்க.கதிரவன், நகராட்சி ஆணையர் ஏகராஜ், தலைமை ஆசிரியர் சகாயஜோசப்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.