திருப்பூரில் 9-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 130 பேர் கைது

திருப்பூரில் 9வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 130 பேர் கைது.

Update: 2021-02-10 17:43 GMT
திருப்பூர், 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நேற்று காலை 9-வது நாளாக நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் பரமேஸ்வரி மறியல் போராட்டத்தை தொடங்கிவைத்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

போராட்டத்தில் பங்கேற்ற ஆண்கள் சட்டையை கழற்றி ஈரத்துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினார்கள். இதுபோல் பெண்கள் கருப்பு சேலை அணிந்து ஒப்பாரி வைத்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பல்லடம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் தலைமையிலான தெற்கு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றி குப்பாண்டம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 90 பெண்கள் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்