3 மாதத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைப்பு
3 மாதத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கப்படும் என்று விழுப்புரத்தில் ஆய்வு செய்த தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார்.
விழுப்புரம்,
காட்பாடி முதல் விழுப்புரம் ரெயில் நிலையம் வரை தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை தென்னக ரெயில்வே பொதுமேலாளர்ஜான் தாமஸ் ஆய்வு செய்தார். விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதியையும் அவர் பார்வையிட்டார். பின்னர் என்ஜின் டிரைவர்களுக்கு புதிதாக கட்டபட்ட கழிவறைகள் மற்றும் ஓய்வறைகளையும் அவர் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து தென்னக ரெயில்வே மேலாளர் ஜான் தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மின்மயமாக்கும் பணி
விழுப்புரம் முதல் தஞ்சாவூர் வரையும், நாகப்பட்டினம் முதல் திருவாரூர், காரைக்கால் வரையும் ரெயில் மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை இருவழி பாதை அமைக்க தற்போது சாத்தியமில்லை. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவில் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.
கொரோனா வேகமாக பரவியதால் ஏப்ரல் மறறும் மே மாதத்தில் ரெயில்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. தற்போது படிப்படியாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 72 சதவீத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அடுத்த 3 மாதங்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் இனைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.