கடலூா் மாவட்டத்தில் போலீஸ்காரர்கள் குறைகளை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்
கடலூா் மாவட்டத்தில் போலீஸ்காரர்கள் குறைகளை தெரிவிக்க புதிய செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் வழிகாட்டுதலின்படி போலீஸ்காரர்களின் குறைகளை தீர்க்க என்.எல்.சி. நிறுவனத்தின் உதவியுடன் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியின் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ்காரர்களுக்கு ஏற்படும் சம்பள குறைபாடு, பதவி உயர்வு, பணியிட மாற்றம், பொது வைப்பு நிதி, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகளை தெரிவிப்பதற்காகவே இந்த புதிய செயலி (connect app) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனாமதேய தகவல்களை அனைத்து காவலர்களும் இந்த செயலியில் பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே வருங்காலங்களில் போலீஸ்காரர்கள் தங்கள் கோரிக்கைகளை இந்த செயலி மூலமாகவே தெரிவிக்கலாம். இந்த செயலியை போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக கண்காணித்து புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பார். மேலும் இச்செயலி மூலம் பெறப்படும் புகார்களுக்கு, சம்பந்தப்பட்ட பிரிவு மூலமாகவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதனால் போலீஸ்காரர்கள் தங்கள் குறைகள் சம்பந்தமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டையோ, காவல் அலுவலகம் பிரிவு கண்காணிப்பாளரையோ நேரில் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
இச்செயலி மூலம் போலீஸ்காரர்கள் தெரிவிக்கும் குறைபாடுகள், நேரில் வந்து மனு கொடுத்ததாகவே கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே போலீஸ்காரர்கள் இந்த செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி, பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.