கொரடாச்சேரி ஒன்றியத்தில் நெற்பயிரில் மகசூல் இழப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

கொரடாச்சேரி ஒன்றியத்தில் நெற்பயிரில் மகசூல் இழப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2021-02-10 16:35 GMT
கொரடாச்சேரி:-
கொரடாச்சேரி ஒன்றியத்தில் நெற்பயிரில் மகசூல் இழப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காப்பீட்டு தொகை
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு முழுமையான காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெற்பயிரில் மகசூல் இழப்பு குறித்து பயிர்க்காப்பீடு நிறுவனத்தின் சார்பில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மகசூல் அளவீடு
கொரடாச்சேரி, காப்பனாமங்கலம், கரையாபாலையூர், எண்கண், முசிறியம், முகந்தனூர் உள்ளிட்ட 58 இடங்களில் இந்த ஆய்வு நடந்து வருகிறது.
ஒரு கிராமத்துக்கு 4 இடம் என்ற விகிதத்தில் தேர்வு செய்து ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்விற்காக 5 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு அதில் கிடைக்கும் மகசூல் அளவிடப்படுகிறது. இந்த அளவீடுகள் வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் பயிர் காப்பீட்டு நிறுவனமான இப்கோ டோக்கியோ நிறுவன ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
வங்கிகள் மூலமாக...
கொரடாச்சேரி ஒன்றியம் எண்கண் கிராமத்தில் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். உதவி வேளாண்மை அலுவலர் ராஜா, பயிர் அறுவடை பரிசோதகர் மதியழகன். இப்கோ டோக்கியோ பயிர் காப்பீடு நிறுவன மேற்பார்வையாளர் கபிலன் மற்றும் விவசாயிகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
ஆய்வின் மூலம் கண்டறியப்படும் அளவீடுகள் வேளாண்மைத் துறை அதிகாரிகளால் புள்ளியியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் விவரங்களை சேகரித்து புள்ளியியல் துறையினர் அரசின் மூலம் காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பர். அதன் அடிப்படையில் பயிர் இழப்பீடு கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்து வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்