9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில், 9-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் 9-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 80 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-10 16:28 GMT
திருவாரூர்:-
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் 9-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 80 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 அம்ச கோரிக்கைகள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 18 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கும் ஆதிசேஷையா கமிட்டியினை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 2-ந் தேதி முதல் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நூதன போராட்டம்
நேற்று 9-வது நாளாக திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது மகாலிங்கம் என்பவர் ஓய்வூதியம் கிடைக்காமல் வருவாய் இன்றி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்துக்கு சங்க மாவட்ட நிர்வாகி தனபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் அசோக், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
80 பேர் கைது
மறியல் காரணமாக திருவாரூர்-தஞ்சை பிரதான சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து திருவாரூர் தாலுகா போலீசார் மறியலில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்