தாலுகா அலுவலகத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் முற்றுகை
ராமேசுவரம் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளில் மீன் பிடிப்பை தடுக்கக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளில் மீன் பிடிப்பை தடுக்கக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை
ராமேசுவரத்தில் நேற்று தீவு பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு மற்றும் தனுஷ்கோடி பாரம்பரிய மீனவர் நல சங்கம் சார்பில் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை வைத்து மீன் பிடித்து வரும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத் துறை அதிகாரிகளை கண்டித்தும், இதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி தொழிலை பாதுகாக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தாலுகா அலுவலகத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் ஜெகநாதன், முனியராஜ், அமுதன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் முருகானந்தம், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் செந்தில்வேல், வட கொரியா, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கண் இளங்கோ உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தின்போது மீன்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். முற்றுகை போராட்டம் நடத்திய மீனவர்களுடன் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மீனவர்கள் அவரிடம் ராமேசுவரம் தீவு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதை கண்டித்தும் உடனடியாக அந்த படகுகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு தடை செய்யப்பட்ட வலைகள் மீன் பிடிப்பை உடனடியாக முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லை என்றால் நாட்டுப் படகுகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி ராமேசுவரம், பாம்பன் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்வோம் என தெரிவித்தனர். அப்போது மீன்துறை உதவி இயக்குனர் தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன்பிடிக்கும் படகுகளை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தார். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.