இந்த ஆண்டு முதல் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை

ராமநாதபுரத்தில் நடைபெற்றுவரும் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளில் இதுவரை 48 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் வகையில் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் பணிளை நேரில் ஆய்வு செய்த சுகாரத்துறை இணை செயலாளர் நடராஜன் தெரிவித்தார்.

Update: 2021-02-10 14:20 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் நடைபெற்றுவரும் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளில் இதுவரை 48 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் வகையில் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் பணிளை நேரில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை இணை செயலாளர் நடராஜன் தெரிவித்தார்.
கட்டுமான பணி
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் ரூ.345 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் வகையில் கட்டிட பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இந்த பணிகளை தமிழக அரசின் சுகாதாரத்துறை இணை செயலாளர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்று வரும் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் மற்றும் டி-பிளாக் பகுதியில் நடைபெற்று வரும் கட்டிட பணிகள் முதலியவற்றை பார்வையிட்டு விரிவான ஆய்வு செய்தார். 
கட்டிட பணிகளின் தற்போதைய நிலை, அதன் தரம், வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட இணை செயலாளர் நடராஜன் மருத்துவ அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள், பொறியாளர்களுடன் விவரங்களை கேட்டறிந்து உரிய அறிவுரைகள் வழங்கினார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசின் உத்தரவின்படி மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளேன். மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி கட்டிட பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
மாணவர் சேர்க்கை
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் 48 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் வகையில் அதற்கான கட்டிட பணிகளில் கவனம் செலுத்தி தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. 
குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டு  உள்ளது. பணிகள் தரமாக திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்