66 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு - சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தில் படித்த 22 பேர் வெற்றி

66 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தில் படித்த 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

Update: 2021-02-10 05:21 GMT
சென்னை,

குரூப்-1 பதவிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வு அடிப்படையில் குரூப்-1 பதவிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கான தொகுதி-1 (குரூப்-1) முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட இருந்தது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி நடத்தப்பட்டது.

இந்த தேர்வை எழுதுவதற்கு 2 லட்சத்து 56 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 701 தேர்வர்கள் இந்த முதல்நிலை தேர்வை எழுதினார்கள்.

தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட 37-வது நாளில் முதல்நிலை தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது. தேர்வர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், 50 இடங்களுக்கு ஒருவர் என்ற வீதத்திலும் இடஒதுக்கீட்டை பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அதற்கான தேர்வில் கலந்து கொள்ள தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருகிற 16-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மார்ச்) 15-ந் தேதி வரை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், முதன்மை எழுத்து தேர்வுக்கு 3 ஆயிரத்து 752 தேர்வர்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். முதன்மை தேர்வு வருகிற மே மாதம் 28, 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடத்தப்பட இருக்கிறது. மேலும் இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த முதல்நிலை தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் இலவச பயிற்சி அளித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர், கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அந்தவகையில் பயிற்சியில் பங்கு பெற்று தேர்வை எழுதியவர்களில் 12 பெண்கள், 10 ஆண்கள் என மொத்தம் 22 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக அவர்கள் எழுத இருக்கும் முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளை மனிதநேயம் மையம் செய்து வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள்www.mntfreeias.com என்ற மனிதநேயம் மையத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதேபோல் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பல்வேறு துறைகளுக்கான 733 பதவிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10 மற்றும் 25-ந் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த தேர்வு முடிவின் அடிப்படையில் அடுத்தகட்டமாக நடைபெறும் நேர்காணல் தேர்வுக்கு 22 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கான நேர்காணல் தேர்வு வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்