மாமல்லபுரம் அருகே, சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
உயரமான கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நெம்மேலி குப்பத்திற்கு தாழ்வான நிலையில் செல்லும் இணைப்பு சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதால் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பத்தில் 400-க்கும் மேற்பட்ட மீனவ குடியிருப்பில் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மீனவர்கள் அனைவரும் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலை மீனவ குப்பத்தில் இருந்து 15 அடி உயரத்தில் உள்ளது. இந்த கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நெம்மேலி குப்பத்திற்கு தாழ்வான நிலையில் இணைப்பு சாலை செல்கிறது. நெம்மேலி குப்பத்தில் இருந்து இந்த இணைப்பு சாலை வழியாக உயரத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை மோட்டார் சைக்கிளில் அந்த பகுதி மீனவர்கள் கடக்கும்போதும், அதிவேகத்தில் செல்லும் கார், லாரி, வேன் போன்ற வாகனங்களில் இரு சக்கர வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது.
அதேபோல் உயரமான கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தாழ்வான சாலையில் இறங்கி தங்கள் குடியிருப்புகளுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. இதுமாதிரி நடந்த 12 விபத்துகளில் நெம்மேலி மீனவ கிராமத்தை சேர்ந்த 10 வாலிபர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலமுறை இது மாதிரி விபத்துகள் நடக்காத வண்ணம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நெம்மேலி குப்பம் வரை உள்ள இணைப்பு சாலையை சீரமைத்து தரக்கோரி சாலை போக்குவரத்து நிறுவனத்திற்கு மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுப்படுகிறது.
எனவே இந்த சாலையை கிழக்கு கடற்கரை சாலையின் உயரத்தில் இருந்து தாழ்வான பகுதி வரை சீரான முறையில் மறுசீரமைத்து சாலையை செப்பனிட வேண்டும் என்று நெம்மேலி குப்பம் மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.