ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஈரோடு, தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஈரோடு
வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியமாக ரூ.15 ஆயிரத்து 700 வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். மாநில அளவில் உள்ள 3 ஆயிரத்து 80 வருவாய் கிராம உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும், ஈரோடு, தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் ஆர்.ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் ஏசையன், மாவட்ட தலைவர் சந்திரசேகர், செயலாளர் நடராஜன், அம்புரோஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.