காதலர் தின கொண்டாட்டம்: ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி பாதிப்பு
ஓசூர் பகுதியில் உற்பத்தி குறைவால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ரோஜா சாகுபடி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியானது நல்ல மண்வளம், சீரான தட்ப வெப்பநிலையை கொண்டுள்ளதால் விவசாயிகள் இந்த பகுதியில் அதிகளவில் ரோஜா மலர் சாகுபடி செய்துள்ளனர். ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமைக்குடில்கள் அமைத்தும், திறந்தவெளி மூலமும் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் தாஜ்மகால், நொப்ளஸ், பர்ஸ்ட் ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வகையான ரோஜா மலர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் கொண்டாட்டங்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் காதலர் தினத்திற்கு மட்டும் ஆண்டுக்கு 1 கோடி மலர்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
உற்பத்தி பாதிப்பு
இந்த நிலையில் கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் ரோஜா உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்படுவதில்லை என்று கூறப்படுவதாலும் மலர்களுக்கான வரவேற்பு குறைந்துவிட்டது.
இதனால் வெளிநாட்டு ஆர்டர்களும் இதுவரை கிடைக்கவில்லை என்று ஓசூர் பகுதி ரோஜா சாகுபடியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் உள்ள உள்ளூர் சந்தைகளில் ஓசூர் ரோஜா மலர்களுக்கு தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. இருந்தபோதிலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதியானால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் கடந்த 2 மாதங்களாக எப்போதும் இல்லாத அளவிற்கு கடுங்குளிர் வாட்டுவதால் ரோஜா தோட்டங்களில் மொட்டுகள் சரிவர மலர்வதில்லை. இதனால் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர்.
ஆர்வம் இல்லை
மேலும் வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்களை அனுப்புவதற்கான விமான சேவை கட்டணம் தற்போது 4 மடங்கு அதிகரித்து விட்டதாலும், உள்ளூர் சந்தையிலேயே ரோஜா மலர்களுக்கு நல்ல விலை கிடைத்து வருவதாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில், ரோஜா உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு அதிக ஆர்வம் காட்டவில்லை.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தோட்ட கலை அமைப்பின் தலைவர் வெங்கடாசலம் என்ற பாபு, செயலாளர் பரமேஷ் ரெட்டி மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், ஓசூர் பகுதியில் இந்த ஆண்டு ரோஜா உற்பத்தி, மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதிகபட்சமாக 20 லட்சம் மலர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சூழல் உள்ளது என்றனர்.