காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை கைதியிடம் செல்போன் பறிமுதல்
காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுவை காலாப்பட்டு மாத்தூர் சாலையில் உள்ள மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இங்குள்ள ரவுடிகள் சிலர், வெளியில் உள்ள தங்களது கூட்டாளிகள் மூலம் தொழில்அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க சிறை சூப்பிரண்டு மற்றும் வார்டன்கள் கைதிகள் அறைகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சிறை சூப்பிரண்டு கோபிநாத் தலைமையில் சிறைத்துறை ஊழியர்கள் விசாரணை கைதிகள் அறைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது செல்போனில் பேசிக்கொண்டிருந்த கைதி நந்தகுமார் என்பவரை சுற்றிவளைத்தனர். அவரிடம் இருந்து செல்போனை சிறைத்துறையினர் கைப்பற்றினர். அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது, 3 சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து காலாப்பட்டு போலீசில் சிறை சூப்பிரண்டு கோபிநாத் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.